என்னுரை!



இத்தனை நாளாய் -
உருகி உருகி
கவிதை எழுதினேன்!
உரக்க படித்து
உற்சாகம் பெற்றேன்!
எனது தோள்களை
நானே தட்டிகொடுத்து,
கவிதை காகிதத்தை
கசக்கி எறிந்தேன்!

இப்படி -
மனதில் தோன்றி
மண்ணில் மறைந்தன
எத்தனையோ கவிதைகள்!

இனி -
நான்
ரசித்து கிறுக்கிய
என் தமிழ் -
இந்த வலையில்
என்
எண்ண அலை தாங்கி
வகை வகையாய்
வலம் வரும்!

கவிதை -
எனக்கு தோழன்!

கவலைகள் என்னை
களவு செய்யும் போதும்,
சோகங்கள் என்னை
சுட்டெரிக்கும் போதும்,
தனிமை என்னை
தாக்கிடும் போதும்,
சேதாரம் துளியுமின்றி
என்னை காப்பவன்!

எனக்குள் அவனை
கண்டுகொண்ட நாள்முதலாய் -
கணநேரமும் எனைப்பிரிய
கனவிலும் நினைக்காதவன்!

கவிதையின் ஓரங்களில்
கற்பனை இருக்கும்!
வரிகளின் முடிவில்
அனுபவம் இருக்கும்!
வார்த்தைகள் இடையே
ஆதங்கம் இருக்கும்!

எழுத்து பிழைகள்
எங்காவது இருக்கும்!
கருத்தில் முரண்பாடு
கண்டிப்பாய் இருக்கும்!

எதுவாகினும் -
விமர்சனங்கள் வீசுங்கள்!
கற்றுக்கொள்கிறேன்!
கவிதை தொடர்கிறேன்!!

- ஜெயகுமார் வெள்ளையன்



No comments:

Post a Comment